பெங்களூரு: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோரிக்கை மனுவை அளிக்கச்சென்ற போக்குவரத்துத் தொழிலாளர்களை அமைச்சரும் , அதிகாரிகளும் சந்திக்க மறுத்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை காவல்துறையினர்கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதை கண்டித்தும், 10ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 11-ந் தேதி திடீரென காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், துணை முதல்வர் லட்சுமண் சவதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கத்தின் அறிவித்தனர்.
அதன்படி, இன்று 4வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள்
போக்குவரத்து ஊழியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது,
பணியின்போது கொரோனா தாக்கி மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்குவது,
புதிய ஊழியர்களின் பயிற்சி காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பது,
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரவு நேர தங்கும் படி வழங்குவது,
ஊழியர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக குழு அமைப்பது,
6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பளத்தை உயர்த்துவது,
போக்குவரத்து கழக மண்டலங்கள் இடையே பணி இடமாற்றத்தை அமல்படுத்த ஒரு குழு அமைப்பது,
பரிசோதனையின்போது, டிக்கெட் வழங்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடத்துனருக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்வது
உள்பட 10அம்ச கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது.