மும்பை:

‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன் கட்சி’யாக தேர்வு செய்யப்படும்’’ என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கர்நாடகா தேர்தலுக்க ஒட்டுமொத்த மத்திய அரசு எந்திரமும் பயன்ப டுத்துகிறது. எந்த மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் ஒட்டுமொத்த மத்திய அரசு எந்திரமும் அங்கு பயன்படுத்தப்படுகிறது. பாஜக ஆளும் அனைத்து மாநில முதல்வர்களும் அந்த மாநிலத்துக்கு சென்றுவிடுகின்றனர். சொந்த மாநிலத்தில் எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதை ஒதுக்கிவைத்து விட்டு பிரச்சாரத்துக்கு செல்லும் நிலை உள்ளது.

இவை அனைத்ததையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நல்ல உதாரணம். அவரது மாநிலத்தில் புழுதி புயல் தாக்குதலால் நிவாரணம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் பிரச்சாரத்தில் தீவரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். மாநிலத்தில் உள்ள தங்களது கட்சி தலைமை மீது மத்திய தலைமைக்கு நம்பிக்கை இல்லை’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘எதற்காக ஒரு பிரதமர் 10க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேச வேண்டிய அவசியம் என்ன?. நாட்டை நிர்வாகம் செய்ய அவரது தேவை டில்லியில் அவசியமாக இருக்கிறது.

கர்நாடகாவில் புழுதி புயல் வீசுகிறது. அது சுத்தம் செய்து விட்டு சென்றால் காங்கிரஸ் ‘நம்பர் ஒன் கட்சி’யாக இருக்கும். ராகுல்காந்தியின் பேச்சை மக்கள் கவனிக்க தொடங்கிவிட்டனர். 2019ம் ஆண்டு நடக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றம், லோக்சபா தேர்தலில் சிவசேனா பாஜக.வுடன் கூட்டணி வைக்கும் அளவுக்கான புரிதல் இல்லை’’ என்றார்.