மும்பை :
மும்பை பந்த்ராவில் உள்ள ஒரு இனிப்பு கடை “கராச்சி இனிப்பு கடை” என்ற பெயரில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் அந்த கடைக்கு சென்ற சிவசேனா தலைவர் நிதின் நந்கோங்கர் என்பவர் “தீவிரவாதிகளின் தேசமான பாகிஸ்தானில் உள்ள நகரின் பெயரான கராச்சி என்ற பெயரில் மும்பையில் இனிப்பு கடை செயல்படக்கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
“கராச்சி என்ற பெயரை மாற்ற வேண்டும்” என அவர் மிரட்டல் விடுத்தார். ஆனால் அவரது கருத்தை சிவசேனா மேலிடம் ஏற்கவில்லை.
இந்த பெயர் சர்ச்சையில் பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இப்போது மூக்கை நுழைத்துள்ளன.
“ஒரு நாள் அகண்ட பாரதம் உருவாகும், அப்போது கராச்சி நகரம், இந்தியாவின் அங்கமாகும்” என பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்-அமைச்சருமான தேவேந்திர பட்நாவிஸ் கருத்து தெரிவித்தார்.
பட்நாவிஸ் கருத்துக்கு பதில் அளித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப்கான் “இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளையும் ஒன்று சேர்க்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டால் நான் வரவேற்பேன்” என கூறியுள்ளார்.
“பெர்லின் சுவர் அகற்றப்படும் போது, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஒன்று படுவது சாத்தியம் தான்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– பா. பாரதி