கராச்சி: 
பாகிஸ்தானின் கராச்சியின் ஷெர்ஷாவில் உள்ள பராச்சா சௌக் அருகே ஒரு கட்டிடம் வெடித்ததைத் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் CHK தீக்காயங்கள் பிரிவு மற்றும் ஜின்னா முதுகலை மருத்துவ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகவும்,  அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்கள், வெடிவிபத்தின் தீவிரத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்,  வெடிகுண்டு செயலிழப்பு படையும் வரவழைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என்றும், எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள பெட்ரோல் பம்பு ஆகியவை சேதமடைந்துள்ளன.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுக்கள் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். கனரக இயந்திரங்களும் குவிக்கப்பட்டுள்ளன. அதை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணியின் போது, ​​அந்த இடத்தில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டது.  இரண்டாவது குண்டுவெடிப்பும் எரிவாயு லைனில் நடந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.