டில்லி

மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பாஜக அரசின் பணமதிப்பிழப்பில் நடந்த ஊழல் குறித்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

தற்போது நிதித் துறை அமைச்சகத்தை சேர்ந்த வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு உள்ளிட்ட அமைப்புக்கள் பல எதிர்க்கட்சியினர் இல்லங்களில் சோதனை இட்டு வருகின்றனர். அத்துடன் எதிர்க்கட்சியினரை ஊழல் பேர்வழிகள் என சித்தரிக்க ஆளும் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவி அமித்ஷா உடன் இந்திய உளவு அமைப்பான ரா அதிகாரி, மற்றும் பல அரசு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் உள்ளனர்.

இந்த அதிகாரிகள் மூலம் பல பாஜக அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிடோரிடம் இருந்த ரொக்கப் பணம் 35-40% கமிஷன் பெறப்பட்டு மாற்றப்பட்டதற்கான பேரத்துக்கான வீடியோ என கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கபில் சிபல், “இந்திய சரித்திரத்தில் மிக பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகும்.   தற்போது ஊழலை விசாரிக்க கிளம்பி உள்ள அமைப்புக்களும் அதிகாரிகளும் ஆட்சியில் உள்ளவர்கள் மீது விசாரணை செய்வதே இல்லை. இதைப் போல் பல வீடியோக்கள் உள்ளன. ஆனாலும் அரசு மீது விசாரணை நடத்த எந்த அமைப்பும் தயாராக இல்லை.

ஆளும்கட்சியின் நடவடிக்கை குறித்து பல முறை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியின் குற்றங்கள் என்றால் கண்ணை மூடிக் கொள்கிறது. அத்துடன் தேர்தலுக்கு மிகவும் குறுகிய கால அவகாசமே உள்ளதால் எதிர்கட்சியாகிய நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.