அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்ய ராஜ்யசபா எம்பி கபில் சிபல் முன்மொழிந்துள்ளார்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதன் மூலம் யாதவ் தனது சத்தியப் பிரமாணத்தை மீறியுள்ளார். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் ஈடுபடுத்துவேன் என்று கபில் சிபல் கூறியுள்ளார்.

டிசம்பர் 8 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சட்டப் பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் நீதிபதி சேகர் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.

இதில், சமூக நல்லிணக்கம், பாலின சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை மேம்படுத்துவதே பொது சிவில் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார். ஒரு நாள் கழித்து, நீதிபதியின் வீடியோ வெளியானது.

நாடும் அரசியலமைப்பும் ஒன்றாக இருக்கும்போது, ​​​​சட்டம் ஏன் ஒன்றாக இல்லை? என்று நீதிபதி சேகர் யாதவ் கேள்வியெழுப்பினார். தனது உரையில் ஷா பானோ வழக்கையும் குறிப்பிட்டார். முத்தலாக் தவறானது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். ஆனால் அன்றைய அரசாங்கம் தலைவணங்க வேண்டியிருந்தது என்று பேசினார்.

அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ நேற்று வெளியான நிலையில் அது நாடுமுழுவதும் சர்ச்சையானது.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றத்திடம் விவரங்களை கேட்டுள்ளது.

இந்த நிலையில், இதுபோன்ற அறிக்கையை வெளியிடும் எந்த நீதிபதியும் தனது பிரமாணத்தை மீறுவதாகக் கூறியுள்ள கபில் சிபல், உயர் நீதிமன்ற நீதிபதியால் இப்படிப் பேச முடியும் என்றால் அப்படிப்பட்டவர்கள் எப்படி நியமிக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது என்று கூறினார். மேலும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிட அவருக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது என்ற கேள்வியும் எழுவதாகக் கூறினார்.

அப்படிப்பட்டவர்களை அந்த நாற்காலியில் உட்கார விடாமல் தடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய சிபல், அதுவரை எந்த வழக்கும் அவர்கள் முன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக திக்விஜய் சிங், விவேக் தங்கா, மனோஜ் ஜா, ஜாவேத் அலி, ஜான் பிரிட்டாஸ் போன்ற சில தலைவர்களிடம் பேசியுள்ளேன் என்று சிபல் கூறினார். விரைவில் கூடி நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவோம். இதைத் தவிர வேறு வழியில்லை. இது எல்லா வகையிலும் வெறுப்புப் பேச்சு என்று பேசினார்.