நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பாரத பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். இவரது மனைவி உஷா குமாரி இவர் திருவட்டார் பேரூராட்சியின் பத்தாவது வார்டு காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராக உள்ளார். இவரது கணவரான ஜாக்சன் நேற்று இரவு வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விழ்த்தியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த ஜாக்சனை திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், . இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிய வருகின்றனர். விசாரணையில், மக்கள் பிரச்சினை மற்றும் அரசியல் ரீதியாக முன் விரோதம் காரணமாக வெள்ளஙகோடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, ஜாக்சனை கொலை செய்த நபர்களை கைது செய்யாமல் அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது குடும்பத்தினர் மட்டும் காங்கிரஸ் கட்சியினர் திருவட்டார் காவல் நிலையத்தை முத்திகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த எம் பி விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் டிஎஸ்பி உதய சூரியனிடம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ஜாக்சன் வீட்டிற்குச் சென்ற எம் பி விஜய வசந்த் அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.