கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 24
பா. தேவிமயில் குமார்
போகும் பாதை எங்கும்….
முதலும் இல்லா முடிவும் இல்லா
மாயப் பாதைகள்…
மனதின் முடிச்சுகள்!
நடந்து கொண்டே இருப்பினும்
நகரவில்லை சில
ந(ரக)டை பாதைகள்!
நேரம் போனாலும்,
நீளும்,போ(பா)தையை
தடுக்க இயலாத
கடிகார முட்கள்!
சமூக வலைப்பாதை
சத்தமில்லாமல்,
இறுக்கி காட்டுகிறது
இதயத்தின் நரம்புகளை! சிரித்து கொண்டே!
பால் வீதி… பயணம்
பல கோடி தூரம்
பேசப்படுகிறது..
விண்ணில் மட்டுமல்ல.. மண்ணில் கூட
அடுத்த வீட்டு பாதை
அறியா மனிதனுக்கு
எந்த பாதையும்…
எப்போதும் தேவை இல்லை…
பயணித்தால் தானே
பாதை வேண்டும்?