கஞ்சன்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

“டேய், குரு அந்தப் பிள்ளைக்கு அம்மா, அப்பா ரெண்டு பேருமே இல்லடா, அதனாலதான் இந்த உதவிய செஞ்சேன். எப்பவும் நீ எங்களோட பென்ஷன் பணத்தைக் கேட்டதில்லையே, அதனால தான் குடுத்திட்டேன்டா” என ஒரு குற்றாவாளியைப் போல கூறிவிட்டு அமைதியாக இருந்தார், குருவின் அப்பா பத்மன். கண்களில் நீர் வடிந்த படி குருவின் அம்மா கனகம் அருகில் அமர்ந்திருந்தார்.

“இந்தக் கருமத்துக்குதான் உங்கள என்னோட நான் வச்சிக்கல, சே” என சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

பத்மன், கனகம் இருவருடைய பிள்ளைதான் குரு சென்னையில் பெரிய தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிகிறான், அவனுடைய மனைவி இரு குழந்தைகளென இதே சென்னையில் வேறு பகுதியில் உள்ளான், இவர்களது இளைய மகன் ராம் அமெரிக்காவில் தங்கிவிட்டான், இனி இங்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

பத்மன் தாத்தா, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் சொந்த ஊருக்கு செல்லாமல் குருவுடன் சேர்ந்து இருக்க வந்தார், பின் அவனுடைய மனைவிக்கும் இவர்களுக்கும் சரி வரவில்லை அதனால் குரு தாய், தந்தையை சென்னையிலே தனியாகக் குடியிருக்க வைத்தான், சமைப்பதற்கு லதா என்னும் பெண்ணை வேலைக்கு அமர்த்திவிட்டான் வாரம் இருமுறை வந்து பார்த்து செல்வான்.

பின் பென்ஷன் எடுத்துவர, மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்ல என அவ்வப்போது வருவான்.

அப்போது கூட உங்கள் செலவுகளை பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் பணம் எனக்கோ, தம்பிக்கோ வேண்டாம், எங்களை நல்லாப் படிக்க வச்சிட்டிங்க அது போதும் என்பான்.

சொந்த ஊரான சேலத்துக்கு சென்று விடலாம் என நினைத்தாலும், மகன் வந்து செல்கிறானே என்ற எண்ணத்தில் சென்னையிலேயே இருந்தனர்.

இப்படியே இரண்டு வருடம் ஓடியது, இவர்களுக்கு சமைத்துப் போட்டு வந்த லதா திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனாள், அவளுக்கு ஏற்கனவே கணவன் இல்லை எனவே அவளுடைய இரு குழந்தைகளும் அனாதைகளாயின, லதாவின் உறவுக்காரர்கள் வீட்டில் அந்தக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் தொடர்ந்து படிக்க வைக்காமல், இவர்கள் வீட்டிற்கு பெண் ரேவதியை சமையலுக்கு அனுப்பி விட்டனர், அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி செல்ல வேண்டியவள், இன்னொருவன் பையன், அவன் பெயர் ஆதி, அவனை டீக்கடைக்கு டம்ளர் கழுவும் வேலைக்கு அனுப்பிவிட்டனர்.

இருக்க இடம் கொடுத்தவர்களுக்கு சம்பாதித்து தந்தனர் இரு பிள்ளைகளும், அப்போது ஒரு நாள் ஆதி காரில் சிக்கி கால் முறிந்தது, இதையறிந்த பத்மன், கனகம் தம்பதியினர் தங்களுடைய சேமிப்புப் பணம் ரூபாய் 50,000 அளித்து சிகிச்சை அளிக்கும்படி சொன்னார்கள்.

 

அன்று என்றும் இல்லாத அதிசயமாய் குரு தன் அப்பாவிடம் “அப்பா இரண்டு நாளுக்கு முன்னாடி பென்ஷன் முப்பதாயிரம் எடுத்துத் தந்தேனே அது இருந்தாக் கொடுங்க, கொஞ்சம் அவசர செலவு என்றான்”, என்ன செய்வது என தம்பதியர் நினைந்தனர், பின் ஆதிக்கு பணம் கொடுத்ததை அறிந்து குரு ஆத்திரமடைந்தான்.

அன்று இரவு அவரது இளைய மகன் ராம், பத்மனுக்கு போன் செய்து,

“அப்பா, தனக்கு மிஞ்சியது தான் தானம், குரு எப்பவாவது பணம் கேட்டிருக்கானா ? வேலைக்கான சம்பளத்தை வேலைக்காரங்களுக்கு குடுங்க, அதைவிட வேற ஏதாவது செய்யணும்னா சாப்பாடு போட்டு அனுப்புங்க, அவனுக்கு நான் இப்ப பணம் போட்டுட்டேன், இனியாவது ஜாக்கிரதையா, பத்திரமா இருங்க” என அவன் அர்ச்சனை செய்தான்.

அப்பாவுக்கு பணத்தின் அருமை தெரியலை என கோபப்பட்டு குரு பத்து நாட்களாக அப்பா, அம்மாவைப் பார்க்க வரவில்லை பின் ஒருநாள் பார்க்க வந்தான் அப்போது வீட்டு உரிமையாளர் ஒரு கடிதத்தினைத் தந்தார்

அன்பு குருவுக்கு,

ஆசிகள் பல, என்ன வீடு பூட்டி இருக்கா ? உன்னையோ தம்பியையோ நாங்கள் குறை கூறவில்லை.

உங்களால் முடிந்த வரை எங்களை சில வருடம் பார்த்துக் கொண்டீர்கள், அதற்கு நன்றி.

நிற்க, உங்கள் இருவரையும் படிக்க வைக்க என் சம்பளம் அனைத்தும் செலவழித்தேன், நான் ஒரு நாளும், ஒரு டீக்கூட வாங்கிக் குடித்ததில்லை, அந்த இரண்டு ரூபாய் இருந்தால் உங்களுக்கு ஒரு பென்சில், பேனா வாங்கித் தரலாம் என்று எண்ணுவேன், உன் அம்மாவிற்கு சேர்ந்தாற்போல இரண்டு புடவைகள் வாங்கிக் கொடுத்ததில்லை, குறைந்த சம்பளத்தில் ஒரு அறை உள்ள குடிசை போன்ற வீட்டில் உங்கள் நலனுக்காகவே நான் வாழ்ந்து முடித்தேன், இதனால் கஞ்சன் என என்னை அனைவரும் பேசுவார்கள்.

இப்போது உங்களை ஆளாக்கி விட்டேன், எனவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தோஷமாக வாழுங்கள், நானும் அம்மாவும் இந்த இரு குழந்தைகளை கூட்டிச் சென்று படிக்க வைக்கப் போகிறோம், சென்னையில் வாடகை கொடுத்து என்னால் படிக்க வைக்க முடியாது எனவே சேலம் அருகிலுள்ள நம் பூர்வீக கிராமத்தில் இருக்கும் நம் சொந்த வீட்டிற்கு செல்கிறேன், உங்களைப் போல இல்லாவிட்டாலும், என்னால் இயன்ற வரை இந்தக் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் வழி காட்ட அழைத்துச்செல்கிறோம், இனி எங்களைப் பற்றி கவலைப்படாதே, உன் குடும்பத்தினைப் பார்த்துக்கொள்.

ஆசீர்வாதங்களுடன்

அப்பா

இதைப்படித்த உடன் குருவுக்கு கோபம் வரவில்லை மாறாக தன் தந்தையின் மீது அதிக மரியாதை ஏற்பட்டது, கண்கலங்கியவாறே கடிதத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.