கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 6
பா. தேவிமயில் குமார்
முகமூடி
இங்கு போல
அங்கு வாயாடாதே !
அவனுக்குப் பிடித்த
ஆரஞ்சு நிறத்தை அடிக்கடி உடுத்திடு !
அவனுக்கு கடவுள் பிடிக்காதாம்
ஆனால் நீ கும்பிட அனுமதி உண்டாம் !
டிகிரி காபி ரொம்ப பிடிக்குமாம்
தினமும் போட்டுப் பழகிடு !
அவன் அப்படி, இப்படி இருந்தால்
அனுசரித்துப் போயிடு !
உன் அறிவாளித்தனத்தை தூரம் வை,
எதுவும் தெரியாதது போல இருந்திடு !
குழம்பு வைக்க, கோலம் போட
கணவன் மகிழ, கச்சிதமாய்
நடந்திடக் கற்றுக்கொள் !
அசாத்திய தைரியத்துடன் வளர்த்து விட்டோம்,
ஆனாலும் அவனுக்கு அடங்கியேப்போ !
என வண்டி வண்டியாய்
அறிவுரைகள் கொட்டப்பட்டது
என் தலையில் !
அவனுக்கு எந்த
அறிவுரையும் தேவை இல்லையாம்,
ஏனென்றால் அவன் “ஆம்பளையாம்”
அவன் அவனாகவே
இருந்திடுவானாம்,
நான் மட்டுமே
மாறுவதுதான் மரபாம் !
இருவர் சேர்ந்தது தான் திருமணம்
ஆனால் எனக்கு மட்டுமே
கட்டு பாடுகளும்
கட்டளைகளையும்
இரு வீட்டிலும
ஏராளமாய் …..,.
தாராளமாய்
தருகிறார்கள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
ஏதோ ஒரு காரணம் காட்டி
கொட்டிலில் அடைத்து விடுவீர்கள் !
எப்போதும் ஏதோ ஒரு காரணம்
இப்போது கிடைத்தது, திருமணம் !
இவ்வளவு முகமூடிகளையும்
எடுத்துக் கொண்டேன், வேறென்ன ?
என் முகத்தை மறந்து போனேன்
இவ்வளவுக்குப் பிறகான
பட்டம்தான் “திருமதி”