கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 4

பா. தேவிமயில் குமார்

கதவருகே

கிளம்பும் அவசரத்தில்
காதல் கதவருகே ஒதுங்கி நின்றது !

ஓடும் அவசரத்திலும்
காதல் பொறுமை காக்கிறது

உணவுப் பைக்குள்
ஒளிந்து கொள்கிறது இறுக்கமாய் !

இன்றாவது
இணையிடம்
காதல் பேச வேண்டும்,
கைப் பிடிக்க வேண்டும்,
கண் பார்க்க வேண்டும்,
என வீட்டில் நுழைந்தவுடன்…
எதிர்ப்படுவது…
லோன் கட்டணும்,
EMI கட்டணும்,
…………..
…………..
வரிசை கட்டின
வாழ்க்கைப் பட்டியல் !
மறைந்து நின்றது
மீண்டும் காதல்
கதவருகில் !

பயணப்பட்டுக் கொண்டே
போகிறது,
பரிதாபமாய் பார்க்கிறது
மனிதனை !

எரி நட்சத்திரங்களாய்
எப்போதாவது எட்டிப்பார்க்கிறது
அவனுக்குள்ளும் !

ஆனால் வந்த வேகம்
அறியாமல் வேலைகளுக்கு
நடுவே ஒளிகிறது !

அன்றைய தினத்தின்
கடைசிக் கோப்பாகக் காதல் !

உணவு இடைவேளையில்
வயிறு நிரம்புகிறது !
காதல் மனம் ??
தினமும் வெற்றிடமாய்…
தேடுகிறது நேரத்தை !