கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 31

பா. தேவிமயில் குமார்

 

 

 

பகடை

அடுக்கு எண்களால்
என்மீது
அடுக்குக்கப்பட்ட
கன(ண)ங்கள் !

அலறுகிறேன் எண்களைப் பார்த்து
ஆனாலும்
என்னை விடவில்லை,
வாய்ப்பாடு!

எண்ணியலை
எண்ணியபடியே
கண்ணீருடன்
கழிந்த நாட்கள்…..

தேற்றங்கள் பிடிக்கவில்லை,
வேறுபடித்திடலாம் என
தேற்றிட யாருமில்லை!!
அப்போது!

தொடுகோடும்,
நாற்கரமும்
என்னை வெட்டுக்கோடுகளாகி
பயமுறுத்திய பொழுதுகள்!

கணக்குப் பரிட்சை என்றாலே
கனத்துப் போகிறது
புத்தக மூட்டை !.. பயத்துடன்,

எங்கிருந்து வந்ததோ!
காய்ச்சல்,
கணக்குப் பரிட்சையன்று மட்டும்
எனக்கு ?

தெடர்வரிசையாக
கணக்குப் படித்திட துரத்தல்,
அறிவுரை என்ற பெயரில் !
ஆளாளுக்கு…..

சகுந்தலா தேவியாக
என்னைப் பற்றிய அவர் தம்….
கற்பனை…எனக்கோ
சாகுந்தலம் படிக்கும் கனவுகள்!

இரண்டரை மணி நேரம் கடந்திட,
எத்தனை சாமிகளைக் கூப்பிட?
எத்தனை வேண்டுதல் கள் வைத்திட?

பகடை வீசும் மனநிலையில் நான்,
பகடை கணக்கோடு கரும்பலகை முழுக்க
எண்கள்… என்னை
பார்த்து பகடி செய்ய….

கணக்கு டீச்சர்
லீவ் எடுக்கவே
மாட்டார்களா?
என, எதிர் பார்த்து
ஏமாந்த நாட்கள் அதிகமே!

ஏனோ….. பல வருடமானாலும் பதறுகிறது மனம் !…
கணக்குப் பரிட்சை அறையை… இன்றும்
கனவில் காணும்போதேல்லாம்!…