கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 29

பா. தேவிமயில் குமார்

குடை

*இருக்கும் ஒரு
குடையும்,
விரிய மறுத்து
விட்டது!

வா, காதல் மழை
நமக்கானது
நனைந்திடலாம்!

கைப்பையுள்
குடை, கதகதப்பாக
உறங்கிடட்டும்!

*பெரு மழையிலும்
குடை பிடிக்க,
பிடிக்கவில்லை
உன்னுடன் நடக்கையில்

*வண்ண குடைகள்
எல்லாம்
உன் கன்னத்தை
உரசிடும் கம்மலாகவே
கண்ணுக்குத் தெரிகிறது!

*குடை தாண்டி
உன் பாதம் தொடும்
மழைக்கு
என்னை விட
அதிக காதலோ
உன் மேல்?

*சின்னப்ப தாசும்
ஜெனிபரும்
குடையுள்… இருக்கும்
கலர் பூக்களாக…
நினைவுகளில்!

*அடைந்து கிடந்த
குடைக்கு
மழை முத்தம்
தந்து வரவேற்கிறது

*காதலர் குடை
பிடிப்பதில்லை!
தம்பதியானவுடன்
குடை பிடிப்பதேன்?