கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 26

பா. தேவிமயில் குமார்

பசுமை மாறாத பள்ளி நினைவுகள்

சிலேட்டு பல்பத்தை
சுமையற்ற சுமையாக
சுமந்தோம்!

காகிதமில்லாமல் ஆயுத
எழுத்தை எழுதினோம்!

மயிலிறகு குட்டி போட
மந்திரங்கள்
ஓதினோம்!

ஜவ்வு மிட்டாயில் மணி
பார்த்து நடந்தோம் !
ஜாலியாக!

உடைந்த ஓடு, கீற்று,
அட்டை போட்ட வகுப்பறை…
ஆனாலும் ஆனந்தம் கொண்டோம்!

பள்ளி வாகன மேதுமில்லை!
பயணித்தோம் .. ஆனாலும்,
பள்ளம் மேடு பார்த்து!

ஒடியா, ஓடியா,
கூறு அஞ்சி காசு,,,, கூவிடும்,
கட்டில் கடை ஆயித்தா கிழவியின்..
விளம்பர பாணி குரல்!

மதிய உணவுக்காகவே
மறக்காமல் பள்ளி வரும்
மஞ்சுவும், செல்வியும்!

பூவில்லாமல் பள்ளிப்
பக்கம் வர மாட்டாள்,
பெருமாயி!

தவக்களை பிடித்து ,
தாறு மாறாய் பயம்
தரும் பிரபுப்பயல்!

ஆண், பெண் பேதமில்லாமல்
அலைந்து திரிந்தோம்
பயமில்லாமல்!

ஆங்கிலம் வேண்டாமென
அழுது, பயந்த
மூன்றாம் வகுப்பு
மொழி போராளியின்
முகம் இன்னும் நினைவில்…..

மா வற்றலுக்கு, முறுக்கும்
கோணப் புளிக்கு,
கல்கோனாவும்,
பண்டமாற்று நடந்தது !

வேட்டி, சட்டை அணிந்த வாத்தியார்!
வயர் கூடை எடுத்து
வரும் எளிமையான
டீச்சரம்மா!

கதவுகள் இல்லாத
வகுப்பறையில்,
கபடமில்லாத இதய
அறைகளை படித்த
அந்நாட்கள்! எழுந்து
வாராதோ…. மீண்டும்!