கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 25

பா. தேவிமயில் குமார்

எங்கே இருக்கிறாய் என்னுயிரே!!

மேலெழுந்த நீலம்
முகர்ந்த காற்றாய்,
உன் நினைவு தூறலில் ஒவ்வொரு
தருணமும்! முகம்
நனைக்கிறேன்!

உன்னை எழுதிட..
வந்து விழுகிறது
வார்த்தைகள்….
வாய்ப்புகள் தான்
வாய்க்கவில்லை!

என் நினைவுகள்
ஏசுகின்றன! “இதே
பொழப்பா” என
உன்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்!

என் கனவுகளுக்கு
வயதாகி விட்டதோ?
உன்னையே, மீண்டும்,
மீண்டும், உளறுகிறது?

நினைவுப் பூங்கொத்து, உன்
முத்தங்களால் மலர்ந்திருக்கிறது
மறக்காமல் பறி(தி)த்துப் போ! இதழ்களை!

பாலையின் மணல்
படிவங்களில்,
நமக்காக பாடலை
மஜ்னு பாடுகிறான்!
லைலாவின் உத்தரவோ?

எந்த ஜாதகக்கட்டம்
உன்னை சிறை யெடுத்தது? சொல்?
எட்டு கோள்களை
ஏழாக்கி விடலாம் வா!

காதல் கவிதை புத்தகம்
போட்டு விட்டேன்,
உன்னை தவிர
ஊரே படிக்கிறது…
உனக்காக எழுதியதை!

ஒவ்வொரு நினைவுகளும்
காதல் வங்கியின்
வரவுகளாய்….
சேர்கிறது….
செலவழித்த, காதலுக்கு
நிறைய வட்டியோடு!

எங்கே இருக்கிறாய்
என் உயிரே?
என்னுள் தானே இருக்கிறாய்?
ஆனாலும் உன்னை
இன்னுமே தேடிக்கொண்டிருக்கிறேன்!