கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 23

பா. தேவிமயில் குமார்

கணவனதிகாரம்

கண்ணகியின் கோபம்,
கணவனதிகாரத்தின்
நீட்சியே!

கற்பை நிரூபிக்க,
கனலில் குளிக்க
எந்த ராமனும்
இதுவரை, பிறக்கவில்லை!

பத்தோடு, பதினொன்றாய்,
பொருளாக நினைத்தே
பெண்ணை சூதாடினான் சபையிலே!

இலை தழைகளை
உடுத்திய ஆதாம்,
அடுத்து உடுத்தினான்
அதிகாரத்தை!

அவன் வழி வந்த
ஆண்களுக்கு,
எளிதாக கிடைத்தது
ஏய்த்திட ஒரு அடிமை!

அவன் ஏவல் செய்ய
ஏவாள்களை,
அன்றிலிருந்து
அருகே வைத்து கொண்டான்!

மனைவி என பெயரிட்டு,
மனையை ஒப்படைத்தான்,
அதிகாரத்தை
அவனிடமே வைத்துக்கொண்டான்
இன்று வரையே!