கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 16
பா. தேவிமயில் குமார்
இதுவே என் அச்சாணி
சிலந்தி வலையில்
சிக்கி விட்டேன்,
இரையின் வலியில்!
ஆற்றங்கரையின்
காய்ந்த நாணல்
எனக்கு மடல் அனுப்புகிறது!
எரி நட்சத்திரம் ஏதோ
என்னிடம் சொல்லவே,
வருகிறது!
காகத்தின் குரலை ரசிக்கிறேன்
குயிலை விட!
கனவு காண்கிறேன்
பக்கிங்ஹாம் ராணியாக!
வெள்ளையருக்கு
ஆணையிட்டு கொண்டே!
நடுப்பகல் நேரத்தில்
நிலவுக்கு சுடுமென அழுகிறேன்!
அனகொண்டாவோடு
அமேசானில் நீந்துகிறேன்,
பருவ நிலை பற்றி பேசிகொண்டே!!!
சேற்று வயல் நண்டுகளிடம்
செய்தி சேகரிக்கிறேன்,
எப்படி வீடு அமைந்ததென?
யானை வாங்குகிறேன்,
ரோல்ஸ் ராய்ஸ் பிடிக்கவில்லை!!!!!!
தெருக் கூத்தில் ஆடுகிறேன்
கண்ணகியாக
என் கோபங்கள் தீரும் வரை!!!!
கதைகளும் கவிதைகளும்
கற்பனைகளும்
ஆக்கம் செய்வதே
அச்சாணியோ
இந்த பிறவியில்?