கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 15

பா. தேவிமயில் குமார்

இன்னொரு நாள் வரும்

உலகில் போர்கள்
இல்லாத
வரலாறு வேண்டும்!

பேரிடர் இல்லாத
பூமி வேண்டும்!

அனாதை
இல்லங்கள்
இல்லாத நிலை
வேண்டும்!

பண்ட மாற்று முறையை
பரவலாக உலகம்
ஏற்க வேண்டும்!

கோடுகள், இடையில்
இல்லாத நாடுகள்
வேண்டும்!

தொழிற் புரட்சிக்குப்
முன்னான
உலகம் வேண்டும்!

சட்டங்கள் இல்லாத
ஒழுங்கு முறை
வேண்டும்!

தங்கம், வைரம் அறியா
ஆதி உலகம் வேண்டும்!

ஆண் பெண்
இருவரும் சேர்ந்து
வேட்டைக்கு போன
நாட்கள் வேண்டும்

என் தாய் மொழியை
உலகெல்லாம்
தன்மொழியாக
ஏற்க வேண்டும்!

பனை ஓலை குடிசைகள்
மட்டும் கொண்ட
ஊர்கள் வேண்டும்!!

பசலை நோயை கூட தைரியமாய்
பாட்டில் வைத்த
சங்க பெண்களை
சந்திக்க வேண்டும்!

ஒரே நிறத்தில்
மனிதர்கள் பிறக்க
வேண்டும்!!

இத்தனை பெயர்களுள்ள
கடவுளோடு
தேநீர் அருந்திட வேண்டும்!……

அந்த நாள்
மீண்டும் பூமி பிறக்கும் நாளாக இருக்குமோ!