கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 11

பா. தேவிமயில் குமார்

நானும் கொண்டாடுகிறேன்……

என் ஆசையின் ஒளி நீளங்கள்
அளவில்லாதது,
ஆனாலும் இடைமறிக்கப்படுகிறேன் !
கருமேகங்களால்

என் லப்டப் ஓசை
லட்சியங்களுடனே அடி வைக்கும்
ஆனாலும்….
எத்தனை முறை நின்று துடித்ததென
அறிவீர்களா ?

என் வார்த்தைகள் உயர எத்தனிக்கும்
ஆனாலும், என் குரல் வளை
எத்தனை முறை நெறிக்கப்பட்டது தெரியுமா ?

அழகான முகத்துடன் இருக்கிறேன்
ஆனால் எத்தனை முறை
அமிலக் கோலம் வரையப்பட்டது என
தெரியுமா ?

தைரியத்தை ஆயுதமாய்
கொண்டவள் தான்
ஆனாலும்
தினசரி செய்திகளால் சற்று
பயத்தையும் கைக்கொள்கிறேன் !

அனைவரிடமும் அன்பு செலுத்த
ஆசைப்படுகிறேன், ஆனால்
என் முதுகினில் பாருங்கள்
எவ்வளவு வடுக்களென !

பொம்மைகளுக்கு திருமணம்
செய்து வைக்கிறேன், உடனே
எனக்கும் திருமணம் செய்து
வைக்கிறார்கள் !

தேன் சிட்டைப் போல பறந்து
திரிய ஆசைதான், ஆனாலும்
கூட்டுப் புழுவைப் போல
கொதிக்கும் நீரில் தவிக்கிறேன் !

என்னிலிருந்து தான்
ஆரம்பம் மதங்களின் கோட்பாடுகள்
நானும் மனிதப் பிறவி தானே ?

ஏகப்பட்ட திரைச்சீலைகள்
என் ஜன்னலுக்கு வெளியே,
எப்போது பிரபஞ்சத்தைக் காண்பேன் !

வானவில்லில் ஊஞ்சலாட
ஆசைப்படுகிறேன், என் வீட்டுப்
படிக்கட்டுகளே எனக்கு
எதிராக மாற்றப்படுவதேன் ?

கருவினில் தப்பித்தேன்
கள்ளிப் பாலில் கூட தப்பித்தேன்
கயவர்களின் பார்வையில்
தப்பிக்க முடியாத பிறவியெடுத்தேன் !

இப்படி எத்தனை
இடையூறுகள் இருந்தாலும்
எதிர்காலம் இனிக்குமென
எதிர்பார்த்து “பெண்கள் தினத்தை”
நானும் கொண்டாடுகிறேன் !