சென்னை

திமுக எம் பி கனிமொழி தமிழர்கள் மத்திய அரசுக்கு தக்கபாடம் புகட்டுவார்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதல்வர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம்,

“அரசியல் ஆதாயத்திற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை தி.மு.க.  கிளப்புகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது ”

என்று கூறினார்.

இதற்கு திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ,

“நீங்கள் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?. தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழர்கள்  விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்”.

என்று பதில் அளித்துள்ளார்.