மும்பை

பாடகி கனிகா கபூரின் தோழியும் பிரபல படத்தயாரிப்பாளர் கரிம் மொரோனியின் மகளுமான ஷஸா மொரானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் சென்ற மாதம் லண்டனில் இருந்து திரும்பி வந்தார்.   அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாததால் அவர் பிரபலங்களுடன் லக்னோவில் பல நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளார்.  அத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த விருந்திலும் கலந்துக் கொண்டுள்ளார்.  அதன் பிறகு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கனிகா லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அங்கு அவருக்கு நடந்த சோதனைகளில் மீண்டும் மீண்டும் கொரோனா உறுதி ஆனது.  சமீபத்தில் நடந்த ஆறாம் சோதனையில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததால் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

இந்நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபலமான ஷஸா மொரானிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பிரபல பாலிவுட் படத்தயாரிப்பாளரான கரிம் மொரானியின் மகள்  ஷஸா மொரானியும் பாடகி கனிகா கபூரும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள்.

தற்போது மருத்துவமனையில் உள்ள ஷஸா மொரானியின் குடும்பத்தினர் அனைவருக்கும் சோதனை நடைபெற்று முடிவு இன்னும் வரவில்லை.