Kangaroo justice in Madhya Pradesh: Cow killer told to marry off his 7-year-old daughter
நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சட்டத்தின் நிழல் கூடப் படிய முடியாத பிரதேசங்களாக இந்தியாவில் எத்தனையோ கிராமங்கள் தற்போதும் நீடிக்கின்றன.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தார்பூர் கிராமம். இங்கே பஞ்சாரா என்ற சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பஞ்சாரா என்பவர், வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, கல்லை விட்டு எறிந்துள்ளார். இது ஒரு கன்றின் மேல் பட்டதில், அது இறந்து விட்டது. பசுங்கன்றை கொன்றதற்காக ஜகதீஷின் குடும்பத்தினரை மூன்று ஆண்டுகள் கிராமத்தை விட்டு தள்ளிவைத்த ஊர்ப் பஞ்சாயத்தினர், கங்கையில் சென்று குளித்து விட்டு, ஊர் மக்கள் அனைவருக்கும் சைவ உணவு பரிமாறி விருந்து வைக்க வேண்டும் என்று வேறு தீர்ப்பளித்துள்ளனர். இவை அனைத்தையும் ஜகதீஷ் நிறைவேற்றி உள்ளார். தற்போது மீண்டும் கூடிய ஊர்ப்பஞ்சாயத்தினர், ஜகதீஷின் 7 வயது சிறுமியை, பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மற்றொரு தண்டனையை வழங்கி உள்ளனர். இதனைக் கடுமையாக எதிர்த்த ஜகதீஷின் மனைவி, குணா மாவட்டத்தின் நடுவர் நீதிமன்றத்தில் சென்று புகார் அளித்துள்ளார். ஒருவழியாக அவர்கள் அதிகாரிகளை அனுப்பி இதுபோன்று கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடக் கூடாது என அந்தக் கிராமத்து ‘பெரிய’ மனிதர்களை எச்சரித்ததுடன் எழுதியும் வாங்கி உள்ளனராம். மத்தியப் பிரதேசத்தில் கங்காரு நீதிமன்றங்கள் எனக் கூறப்படும் கிராமத்து கட்டப்பஞ்சாயத்தினர் இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான கொடுமையான தண்டனைகளை வழங்கி வருவது வாடிக்கையான ஒன்றாகவே நீடித்து வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, அலிராஜ்பூர் மாவட்டத்தில், பழங்குடியினப் பெண் ஒருவர், யாரோ ஒரு நபருடன் ஓடிப்போக முயன்றதாகக் கூறி, சம்பந்தப் பட்ட பெண் அந்த நபருக்கு பகிரங்கமாக மார்பகத்தின் மூலமாக பாலூட்ட வேண்டும் என, அந்த ஜாதிக்காரர்களே தீர்ப்பளித்த கொடுமையும் அரங்கேறி உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தில்கம்கார் மாவட்டத்தில், ஒரு பெண் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறி, கள்ள உறவு வைத்திருந்ததாக கூறப்படும் நபருக்கு பெண்ணின் கணவரையே மதுவிருந்து வைக்குமாறு ஜாதிப்பெரியவர்கள் தீர்ப்பளித்துள்ளனர். வீட்டுக்கு வெளியே கணவர் அந்த நபருக்கு மதுவிருந்து அளித்துக் கொண்டிருக்க, குற்றம்சாட்ட பெண் அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சத்தர்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் இவற்றை விடக் கொடுமையானது. பசுமாட்டைக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 70 வயது முதியவரை ஒற்றைக் காலில் நிற்கச் சொல்லி காட்டு தர்பார் கூட்டம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. இதில் அந்தப் பெரியவர் இறந்தே போய்விட்டாராம். வெளியுலகத்திற்கு தெரிய வந்த சம்பவங்கள் இவை மட்டுமே. தெரியாமல் அன்றாடம் காட்டுதர்பார் மூலம் அரங்கேறும் அவலங்கள் கணக்கிலடங்காதவை என்கின்றனர், சமூக ஆய்வாளர்கள்.
இதுதான் மத்தியப் பிரதேசத்தின் மகாத்மியம்!