நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட், போதைப் பொருள், வாரிசு அரசியல் என்று அடுத்தடுத்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்தவர் நடிகை கங்கணா ரணாவத்.
சமீபத்தில் “சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், நான் மும்பை வரக்கூடாது என வெளிப்படையாக மிரட்டியுள்ளார். மும்பை வீதியின் சுவர்களில் விடுதலை வேண்டும் என்ற சுவரோவியங்களுக்குப் பின் இப்போது வெளிப்படையான மிரட்டல்களும் வருகின்றன. ஏன் மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போலத் தோன்றுகிறது” என்று ட்வீட் செய்திருந்தார்
இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர் சஞ்சய் ராவத்தும் பதில் பதிவு செய்திருந்தார் .
கங்கணா ரணாவத் மும்பை காவல்துறையையும், மகாராஷ்டிர மாநிலத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றும், அவ்வளவு பயமிருப்பவர் மும்பைக்குத் திரும்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார். மேலும், கங்கணா மீது உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கங்கணா ரணாவத் மறுபடியும் ஒரு ட்வீட் செய்துள்ளார் .
“மும்பைக்கு நான் திரும்ப வர வேண்டாம் எனப் பலரும் அச்சுறுத்துவதைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரம், செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்தை நான் அடையும் நேரத்தைப் பகிர்கிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்” என்று கங்கணா கூறியுள்ளார்.