சென்னை
இன்று கமலஹாசன் முன்னிலையில் கவிஞர் சினேகன் தனது காதலி கன்னிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரபல கவிஞரான சினேகன் தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் ஆவார் இவர் இதுவரை 700 படங்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவருக்குப் பல இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணி மாநில செயலராகவும் பதவி வகித்து வருகிறார்.
நடிகை கன்னிகா ரவி மற்றும் சினேகன் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு வீட்டாரும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இன்று சென்னையில் இவர்கள் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை கமலஹாசன் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணம் சீர்திருத்த முறையில் நடந்துள்ளது.
இந்த விழாவில் கமலஹாசனுடன் பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் திருமண வரவேற்பு இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.