சென்னை
இன்றைய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல முக்கிய அறிவிப்புக்கள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவை மிகப் பெரிய மாநாடாக நடத்த கட்சி திட்டமிட்டிருந்தது. காவல்துறையின் அனுமதி கிடைக்காததால் மாநாடு மார்ச் மாதம் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கமலஹாசன் அறிவித்தார்.
இன்று சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4 ஆம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கட்சியின் நிலைப்படு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அது மட்டுமின்றி கூட்டணி குறித்த முடிவு, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்று மாலை இந்த கூட்டத்துக்குப் பிறகு கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அவர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புக்களை வெளியிடலாம் என எதிர்பார்ப்பு உள்ளது..