சென்னை
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் டிவிட்டரில் விமர்சித்துள்ளார்.
இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 43 அமைச்சர்களும் பதவி ஏற்று வருகின்றனர். இதில் தமிழக பாஜக தலைவரான எல் முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.
கமலஹாசன் டிவிட்டரில்,
“தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.
ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?”
எனப் பதிந்துள்ளார்.