வாஷிங்டன் :

மெரிக்கரல்லாத பெற்றோருக்குப் பிறந்த கமலா ஹாரிஸ் இந்த பதவிக்கு போட்டியிட தகுதியற்றவர் என்றும் கமலா ஹாரிஸ் போன்று நடன அசைவுகளை அவரது பாணியில் கேலியும் கிண்டலுமாக பிரசார கூட்டங்களில் நடித்துக் காட்டிய டிரம்பின் செயலையும் மீறி அவருக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது கமலா ஹாரிஸின் வெற்றி.

முதல் பெண் துணை அதிபர்,

முதல் கருப்பின துணை அதிபர்,

முதல் ஆசிய அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த துணை அதிபர்,

என்று பல்வேறு வரலாற்று சிறப்புகளை பெற்றிருக்கிறது கமலா ஹாரிஸின் இந்த வெற்றி.

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக துணை அதிபர் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

துணை அதிபர் தேர்தல் பல்வேறு சிறப்புகளை பெற்றபோதும், 78 வயது ஜோ பைடேன் அதிபராக தேர்வாகி இருப்பது அதிக வயதில் அதிபராக தேர்வானவர் என்ற வரலாற்று நிகழ்வையும் பெற்றிருக்கிறது, இதற்கு முன் டொனால்ட் டிரம்ப் 70 வயதில் தேர்வானது தான் மிக அதிக வயதாக இருந்தது.

ஜோ பைடன், மிக இளம் வயதில் (29) செனட் சபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் ஒர் இந்தியர், தந்தை ஹாரிஸ் ஜமாய்க்காவை சேர்ந்த பொருளாதார நிபுனர். ஏழு வயது இருக்கும் போது இவரது பெற்றோர் பிரிந்து வாழ முடிவு செய்தார்கள்.

அமெரிக்காவில், இனவாத வகுப்புவாத மோதல்கள் உச்சத்தில் இருந்த சமயம், தாயின் அரவனைப்பில் வளர்ந்த கமலாவிற்கு இளைய சகோதரி ஒருவர் இருக்கிறார். இளம் வயதில் தாயாருடன் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள பாட்டி வீட்டிற்கு வரும் கமலா அவரது தாத்தாவின் செல்லப்பெண்ணாக விளங்கினார்.

பள்ளிப் படிப்பை மான்ட்ரியல் நகரில் முடித்த பின் ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யு சி ஹேஸ்டிங் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த கமலா ஹாரிஸ், 2003-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக தேர்வானார்.

கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா 2016-ம் ஆண்டு அமெரிக்க செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தன்னை முன்னிலைப் படுத்திய கமலா ஹாரிசுக்கு போதுமான ஆதரவும் பணமும் இல்லாத காரணத்தால் போட்டியிலிருந்து தாமாக விலகினார்.

இவரது பேச்சையும் செயல்பாடுகளையும் தொலைநோக்குப் பார்வையையும் கவனித்த ஜோ பிடன் தன்னுடன் துணை அதிபராக போட்டியிட இவரைத் தேர்ந்தெடுத்தார்.

தாத்தாவின் செல்லப்பெண்ணாக இருந்தாலும், கமலா ஹாரிசுக்கு பிடித்தது என்னவோ அவரது ‘சித்தி’யை தான், இவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் உச்சரித்த ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தை அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றது.

56 வயது கமலா ஹாரிஸ் உள்ளூர் அரசியலில் இருந்து மாகாண அரசியலுக்கும் இப்போது மாகாண அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கும் வந்திருப்பது. அமெரிக்க வாழ் ஆசிய ஆப்ரிக்க கருப்பின மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பின பெண்கள் அமெரிக்க அரசியலிலும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்குள்ளவர்கள் கருதுகிறார்கள்.

கமலா ஹாரிஸின் இந்த வெற்றி அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசியல் தலைமைபொறுப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தப் போவது உறுதி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

[youtube-feed feed=1]