அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்-பும் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையேயான விவாதம் இன்று நடைபெற்றது.

அமெரிக்காவின் எதிர்கால திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த விவாதத்திற்காக மேடையேறிய கமலா ஹாரிஸ் நேராக டொனால்ட் டிரம்ப்பிடம் சென்று அவருக்கு கைகொடுத்தார்.

முதல் முறையாக டொனால்ட் டிரம்ப்பை நேரடியாக சந்திப்பதாகத் தெரிவித்த கமலா ஹாரிஸ் மரியாதைக்காக கை கொடுத்ததாகக் கூறினார்.

இருவருக்கும் இடையிலான இந்த விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப் கூறிய பல்வேறு திட்டங்கள் மற்றும் கருத்துக்களை இதெல்லாம் சாத்தியமா என்பது போலவும் பொய் பிரச்சாரம் என்பதை போலவும் ஆச்சரியத்துடன் கேட்டார் கமலா ஹாரிஸ்.

இந்த விவாதம் தொடர்பாக அமெரிக்க வாக்காளர்களின் கருத்துக்கள் அடுத்த சில நாட்களில் தெரியவரும் என்று நிலையில், கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாக பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட் தெரிவித்துள்ளார்.

டெய்லர் ஸ்விப்ட்டின் இந்த கருத்து ஜனநாயகக் கட்சியினரிடையே உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த வார கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப்பை விட 1 சதவீத ஆதரவு பின்தங்கி இருந்த கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையே மீண்டும் நேரடி விவாதம் எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.