கொல்கத்தா,
சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற கொல்கொத்தா சென்றுள்ள நடிகர் கமலஹாசன் அங்கு, மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ள கமல் நேற்று காலை திடீரென கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அவர் மம்தா பானர்ஜியை சந்திக்க செல்வதாக கூறப்பட்ட நிலையில், அவர் அங்கு நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவே சென்றதாக கூறப்பட்டது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்ற கமலஹாசன், பின்னர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் அவர் கொல்கத்தா சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்த இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்,
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்க மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதையேற்று அவர் கொல்கத்தா சென்று கலந்துகொண்டார். அப்போது விழா அரங்கத்தில் முதல்வர் மம்தாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து, கமல் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,
தன்னை மீண்டும் மீண்டும் விழாவுக்கு அழைத்து கவுரவப்படுத்தியிருப்பதற்கு நன்றி. நானும் இந்த குடும்பத்தில் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன். இது நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் லண்டன் பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.