சென்னை,

மிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர்கள் கட்சி தொடங்கப்போவதாகவும், தீவிர அரசியலுக்கு வருவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில, தமிழகத்தில் நடிகர்கள் அரசியல் இனி எடுபடாது. தமிழகத்தில் சினிமாவில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும்உருப்பட முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி காட்டமாக கூறி உள்ளார்.

கடந்த ஆண்டு முதன்முதலாக மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய கமல் அரசியல் கட்சி தொடங்கப்போவ தாக கூறியிருந்தார். தற்போது அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் வரும் பிப்ரவரி 21ந்தேதி கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினி தனது ரசிகர்களுடன் சந்தித்தது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கொளுத்தி போட்டார். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி, தானும் அரசியலுக்கு வருவதாக கூறினார்.

இந்நிலையில், நடிகர் விஷாலும் அரசியலுக்கு வர இருப்பதாக கூறினார். மேலும், ஏற்ககனவே தனிக்கட்சி தொடங்கி திவாலான நடிகர் பாக்யராஜும் அதிமுகவில் மீண்டும் இணையப்போவதாக சூசகமாக தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜும் அரசியலுக்கு வர ஆசைப்படுவதாக கூறினார். அதைத்தொடர்ந்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தான் அரசியலுக்கு வர வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று கூறி உள்ளார்.

இதுபோன்று நடிகர்கள் ஏராளமானோர் அரசியலுக்கு வருவேன் என்று ஒத்தைக்காலில் நின்றுவரும் வேளையில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஏற்கனவே ரஜினி குறித்து கூறும்போது,  படிப்பறிவில்லாதவர் என்றும், ரஜினியிடம்  கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. தமிழக மக்கள் புத்திசாலிகள், ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் மாறாது  என்று கூறியுள்ளார்.

அதுபோல கமல் குறித்து கூறும்போது, ‘எலும்பில்லாத, பகட்டான முட்டாள்  கமல்ஹாசனை எதிர்ப்பேன்’ என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  தமிழகத்தில் நடிகர்கள் அரசியல் இனி எடுபடாது. தமிழகத்தில் சினிமாவில் இருந்து யார் அரசியலுக்கு வந்தாலும்உருப்பட முடியாது என்று காட்டமாக கூறி உள்ளார்.