71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது காந்தி மற்றும் சேட்டு (தெலுங்கு) படத்திற்காக சுக்ரிதி வேணு, ஜிப்சி (மராத்தி) படத்திற்காக கபீர் கந்தரே மற்றும் நால் 2 (மராத்தி) படத்திற்காக திரிஷா தோசர், ஸ்ரீனிவாஸ் போகலே, பார்கவ் ஜக்பத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதில் நால் 2 (மராத்தி) படத்தில் நடித்த திரிஷா தோசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

6 வயதே ஆன திரிஷா தோசர் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து விருதைப் பெற மேடையேறிய போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.

விருது பெற்ற திரிஷா தோசரை வாழ்த்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமலஹாசன், “உங்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். எனது முதல் விருதைப் பெற்றபோது எனக்கு ஏற்கனவே ஆறு வயது என்பதால், நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள் மேடம். உங்கள் அற்புதமான திறமையை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எனது நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய திரைப்பட விருது விழாவில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு திரைப்படத் துறையில் மிக முக்கியமான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது.