சென்னை: உடல்நலத்தை கருத்தில்கொண்டு, அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து பேசுவேன்,  சட்டமன்றத் தேர்தலில் அவரிடம் ஆதரவு கேட்பேன்  என்று மக்கள்  நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர்  கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் இன்று மாலை  நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்துக்கு சென்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, ரஜினியிடம் ஆதரவு  கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்ற திமுக பகிரத பிரயத்தனம் செய்து வருகிறது. அதுபோல ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும்  அதிமுக அரசு களத்தில் இறங்கி உள்ளது. இதற்கிடையில்,  திராவிட கட்சிகளுக்கு  இணையாக கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்,

ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ள கமல்ஹாசன்,   “ரஜினியை சென்னை சென்ற பிறகு  நண்பர் என்ற முறையில் சந்திப்பேன்.  அவர்  நலனில் அக்கறை கொள்வதில் நானும் ஒருவன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  சென்னை வந்துள்ள கமல்ஹாசன், இன்று மாலை ரஜினியை சந்தித்து நலம் விசாரிப்பார் என்று தெரிகிறது. அப்போது, சட்டமன்ற தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தில் ஆதரவை தரக்கோரி வேண்டுகோள் விடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர்.