மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. பக்தர்களின் ‛கோவிந்தா கோவிந்தா’ கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர். வைகையாற்றில் இறங்கினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.
உலகப் புகழ் கொண்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வீற்றிருக்கும் கோவில் மாநகரமாகிய மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறம். அதன்படி நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 23 வரை 12 நாட்கள் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சித்திரை திருவிழா வுக்கான கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 12ம் தேதி துவங்கியது. இதையடுத்து, தினசரி மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முன்னதாக, ஏப்ரல் 19ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், அடுத்த நாளாகிய ஏப்ரல் 20ல் மீனாட்சி திக் விஜயமும் நடந்தது. ஏப்ரல் 21ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து நேற்று (ஏப்.,22ந்தேதி) திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து உற்சாகமாக சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று கள்ளழக வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக 21ம் தேதி கள்ளழகர் கோவிலில் இருந்துபுறப்பட்டார். ஏப்ரல் 22ம் தேதி மதுரை மூன்று மாவடி பகுதிக்கு வந்த அவருக்கு எதிர் சேவை நடந்தது. (மதுரை நகர் நோக்கி வரும் கள்ளழகரை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்வை கள்ளழகர் எதிர் சேவை என்று அழைக்கிறார்கள்.) அப்போது, அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன்பாக வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து அழகரை வரவேற்றார். அதைத்தொடர்ந்து, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார்.
தொடர்ந்து வைகை ஆற்றின் மையப் பகுதியில் அமைந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து விழாவின் மணிமகுட நிகழ்வாக கள்ளழகர் இன்று தேதி காலை 6 மணியளவில் பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது ‛கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நாளை 24ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். ஏப்ரல் 26ம் தேதி அழகர் பூபல்லக்கில் அழகர்மலைக்கு திரும்புதல் வைபவம் நடக்கிறது.