சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கைது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், இதுகுறித்து நாளை மறுநாள் விளக்கமளிக்காவிடில் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மர்ம மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல்துறையினர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் சிலரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு விழுப்புரம் ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, உள்ளிட்ட 4 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், பள்ளி தொடர்பான சிசிடிவிகளின் பதிவு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், மேலும் காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் அவர்கள் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை எனில் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.