சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி மற்றும் ரூ.1 செலுத்தி அது அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த 90சதவிகித திட்டங்களை அமல்படுத்தி விட்டதாக அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், இறுதியாக மகளிர் உரிமைத்தொகை திட்டமான, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் 15ந்தேதி அண்ணா பிறந்தநாளான்று தொடங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கான பயனர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 63 லட்சம் பயனர்கள் விண்ணப்பத்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு, சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயனாளிகளின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது. மேலும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி, அந்த பணம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது. அதுபோல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்த தகவலுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பத்தவர்களில் 57லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்? அரசு விளக்கம்!