சென்னை:  தமிழகத்தின் 234 தொகுதிகளிலும்   ‘கலைஞர் நூலகம்’  தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,  இதற்கான பணிகள் அடுத்த 3 மாதங்களுக்கு முடிவடையும் என தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா  நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட துணை முதல்வரும், திமுக இளைஞரணி தலைவருமான  உதயநிதி ஸ்டாலின்,  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி, திராவிட கொள்கைகளுடன் கூடிய சிறந்த 100 தமிழ் பேச்சாளர்களை கண்டறிந்து தருமாறு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தெரிவித்தார். அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்து 17 ஆயிரம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.

இதில், முதல் சுற்றில் 913 பேரும், அடுத்த சுற்றில் 182 பேரும் தேர்வாகினர். கடந்த 26-ம் தேதி நடத்தப்பட்ட இறுதி போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கி பாராட்டினார். அடுத்த ஆண்டும் இதுபோன்ற பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’ திறக்க வேண்டும் என்றும் முதல்வர் கூறியிருந்தார்.  அதன்படி இதுவரை 75 தொகுதிகளில் ஏற்கெனவே நூலகம் திறக்கப்பட்டுவிட்டது. அடுத்த 3 மாதங்களுக்குள்  மீதமுள்ள தொகுதிகளிலும்  ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என உறுதி கூறினார். ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள   ஒவ்வொரு நூலகத்திலும் 4,000 முதல் 5,000 புத்தகங்கள் உள்ளன.  இந்த நூலகங்களை அருகே உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.