கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதேநாளில் கலாபவன் மணி மரணமடைந்தார்.
பிரேத பரிசோதனையில் அவரது உடலில் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், கிருமி நாசினி இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும் நடன கலைஞருமான ராமகிருஷ்ணன் நேற்றிரவு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ராமகிருஷ்ணன். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.