காதல் கவிதைகள் – தொகுப்பு 3

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

தேநீர்

 

உன்னுடன்
உரையாடியவாறே
உனக்கும்
எனக்குமாக,
இரண்டு கோப்பைகள்
தேநீர்
தயாரித்தேன்,
அடடா…..
பரிமாறும் போதுதான்
உணர்ந்தேன்
உன்னிடம் பேசியது
காணொ ளி காட்சியென்று !
என்ன செய்வது ? பாவம்
என்னைப் போலவே
தேநீரும் இன்று
காத்திருக்கிறது உனக்காக !
 

காதல் பீனிக்ஸ்

 

இதுவரை
காதல் மனிதர்களிடம்
அவமானப்பட்டது,
அழவைக்கப்பட்டது,
நிராகரிக்கப்பட்டது,
தராசில் எடை பார்க்கப்பட்டது,
தீயிலிடப்பட்டது,
தீண்டாமல் ஒதுக்கப்பட்டது,
வெட்டிப் போடப்பட்டது,
வேரோடுப் பிடுங்கப்பட்டது,
வெறியோடு விரட்டப்பட்டது,
ஆனாலும்….
இன்னும்…
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு மனிதரிடமும்,
தினம், தினம்
துளிர்த்துக்கொண்டே
தன பயணத்தைத் தொடர்கிறது !

 

மகிழ்ச்சி

 

நீயும் நானும்
பிரிந்த போது
நீண்ட நாள்
வலித்தது இதயம் !
ஆனால் ….
நீ நன்றாக
இருப்பதை அறிந்து
நெஞ்சம் மகிழ்கிறது !
என்ன எழுதியா
வைத்துள்ளார்கள் ?
காதலிப்பவரெல்லாம்
கரம் பிடிக்க வேண்டுமென ?
பிரிவும் காதலின் ஒரு
பகுதியல்லவா ?

 

கருப்பு

 

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா, பாடினான் பாரதி
கருப்புப் பெண்ணை
காக்கையெனப் பாடுகிறான்
ஒரு பாவிப்பயல் !

 

நமக்கான இடம்

 

காதலில்
நமக்கான இடம்
எதுவுமாக இருக்கலாம் !
வெற்றியோ
தோல்வியோ
வருவதை ஏற்றுக் கொள்வோம் !
ஆனால்….
காதல் ஏடுகளில் நமக்கென
கதைகளுண்டு ! எனவே கடைசி வரை
காதலித்துக் கொண்டே இருப்போம்
 

காதல் பாதை

 

பனி மலைப்
போகவேண்டிய
பல காதல் பயணங்கள்
பாலை வனம்
போன பல கதைகளுண்டு !
பாழாய்ப் போகும் என
சபிக்கப்பட்ட காதல்
சாதித்துக் காட்டிய கதைகளும்
சமுதாயத்தில் ஏராளம் !
வாருங்கள் படித்திடுவோம்
காதல் கதைகளை
காலம் உள்ளவரை !

 

பெற்றோர் பார்த்த திருமணம்

 

தாய் தந்தையரால்
தெரியாத, நாம்
திருமணத்தில்
இரு மனமாகிறோம் !
நிச்சயமாய்…..
இதற்கு முன்
எனக்கொரு காதலுண்டு, அதுபோல
உனக்கும் ஒரு காதல் இருக்கலாம்
என்ன செய்வது ?
என் துணையே !
இந்தக் காதல் தன்
இரண்டாம் பாகத்தினை
இப்போது நம்முள்
இணைத்துவிட்டதே !
வா !  வாழ்ந்திடலாம்
வாழும் வரை காதலுடன்
 

இயல்பானது காதல்

 

நீ வருவதாக குறிப்பிட
மழை தூறவில்லை !
மலர் விழவில்லை !
இசை ஒலிக்கவில்லை !
மரத்தை சுற்றி யாரும் ஆடவில்லை !
இயல்பாய் நினைத்தேன்
எதிரில் நிற்கிறாய் !
என்ன செய்வது ?
திரைப்படத்தின் தாக்கத்தை !
 

சமதர்மம்

 

காதல் இங்கே
சம உரிமையைக்
கொடுக்கிறது !
ஆனாலும்
ஏற்றத் தாழ்வுகளை
ஏராளமாய்ப் பார்க்கிறோம் !

 

ஒய்வு

 

உன்னுடன் காதல் செய்து
ஓய்ந்து விட்டேன்
என சொல்வதின் பொருள்
என்ன ?….. தெரியுமா ?
உன்னை இன்னும்
அதிகமாய்க் காதலிக்க
ஆசைப்படுகிறேன் என்பதே !

 

– பா. தேவிமயில் குமார்