காதல் கவிதைகள் – தொகுப்பு 2

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

தொற்று

 

காலத்தின்
முதல் தொற்றான
காதலை, ஏனோ
இன்னும்
“சமூகத் தொற்றாக”
அறிவிக்கவில்லை ?

 

சீதனம்

 

அன்று
காதலைப் பயன்படுத்தி
மனிதர்களை நேசித்தோம் !
இன்று….
பொருட்களைப் பயன்படுத்திக்
காதலை நேசிக்கிறோம்

 

நாடு

 

காதலர் மட்டும்
காதலிக்க ஒரு நாடு
வேண்டுமென்போம் !
ஆனால்
உருவாக்கத்தான்
ஒருவரும் வருவதில்லை !

 

பண்டமாற்று

 

காதலிக்கும் போது
களவு போனது
இதயம்…. உன்னிடமிருந்து
திரும்ப வந்ததென்னவோ ….
கனவுகள்…. நிறையவே !

 

காதல் படபடப்பு

 

காதலைக் கண்டபிறகு
தேன் கூட்டின்
திசை மறந்தத்
தேனீயைப் போல
தடுமாறுகிறது இதயம் !

 

காதலில் ஏமாற்றம்

 

தோல்வியும்,
காத்திருப்பதும்,
காதலில் சகஜம்தான் !
ஆனால்
பொய்க் காதலை
மெய்யென நினைத்த
மனசுக்கு…..
என்றும் நிம்மதியில்லை !
 

ஜாதியக் காதல்

 

கனவின் விளிம்பில்
கரம் பிடித்தேன் உன்னை
அப்பாடா ……
காயங்கள் ஏதுமில்லாமல்
தப்பித்துவிட்டேன் !
கனவென்பதாலே !
 

ஊடல்

 

எப்படியோ,
ஊடல் நாட்களிலும்
நம்மை ஏதோவொரு
இசையால்
இணைத்து விடுகிறாய்
இளை(சை)ய ராஜா !
 

பார்வையாளர்

 

காதலைக்
காதலித்திட
காதலிக்க வேண்டும்
என்பதில்லை !
பார்வையாளராக
இருந்தாலும் போதுமே !
 

கௌரவக் கொலை

 

கேவலமான
செயலுக்கு
கௌரவமான
பெயர் !

 

– பா. தேவிமயில் குமார்