காபூல்: ஆக்பானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் மற்றும் 60 ஆப்கானிஸ்தானியர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதும், பயங்கரவாதிகளான தலிபான்கள் கை ஓங்கியது. அவர்கள் பல மாகாணங்களை கைப்பற்றி, கடைசியாக தலைநகர் காபூலுக்குள்ளும் புகுந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. பழமைவாதிகளான தாலிபான்களின் அட்டூழியத்திதால், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் சிறப்பு விமானங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தற்போது காபூல் விமான நிலையம் அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமான நிலையம் அருகே நேற்று மாலை அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்ததாக கூறப்பட்டது. 2 தற்கொலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், குண்டு வெடிப்பை நடத்தியும் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெடிகுண்டுகளை தாலிபான்கள் வெடிக்க செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
‘காபூலில் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பில் ஏராளமானோர் காயமடைந்து உள்ளதாகவும், 60 ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.