மும்பை: வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அன்வேய் நாயக் தற்கொலை வழக்கை, மராட்டியத்தின் முந்தைய பட்னாவிஸ் அரசு மூடியது ஏன்? என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி ஜி கோல்சே-பட்டீல்.
“தற்கொலைக்கு தூண்டுதல் என்பதும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 306வது பிரிவின்படி கடுமையான குற்றமே. தற்கொலைக்கு தூண்டுவோர் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்கள். இதன்மூலம், இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்” என்றுள்ளார் அந்த முன்னாள் நீதிபதி.
மராட்டிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகான சில நாட்களில், இதுதொடர்பாக அவருக்கு தான் கடிதமெழுதியதாக தெரிவித்துள்ள பி ஜி கோல்சே, “அந்த வழக்கு தன்னால்தான் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது” என்று தான் உரிமைகோரவில்லை என்றும் கூறியுள்ளார்.
தற்கொலை குறிப்புதான் முதல் ஆதாரம் என்று கூறியுள்ள பி ஜி கோல்சே, “குற்றவாளியைக் கைதுசெய்ய ஆதாரம் என்பது மிகவும் முக்கியமானது. அன்வேய் நாயக் செய்த ஸ்டூடியோ வேலையில், மொத்தம் ரூ.82 லட்சங்கள் பாக்கியுள்ளது என்ற ஆதாரமே போதுமானது” என்றுள்ளார் அவர்.
இந்த வழக்கு தொடர்பாக, சில நாட்களுக்கு முன்னர், வலதுசாரி & மோடி ஆதரவு பத்திரிகையாளரான அர்னாப் கோஸ்வாமி, மராட்டிய காவல்துறையினரால் மும்பையில் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.