டில்லி:
லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உயர் அரசு அதிகாரிகள் உள்பட உயர்பதவிகளில் வசிப்பவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கும் அமைப்பான லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக உச்சநீதி மன்ற முன்னாள் நிதிபதி பினாகி சந்திர கோஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லோக்பால் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக லோக்பால் ஏற்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோக்பால் அமைக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அதற்கான தேர்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினரின் பரிந்துரையின் பேரில், லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பி னர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நியமங்களுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நாட்டின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் பங்கேற்றனர்.
அவருடன் நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், ஐ.பி. கவுதம் உள்பட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.