இஸ்லமாபாத்:

பாகிஸ்தான் நீதிபதி பதவியேற்பு விழாவில், ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் பங்கேற்றார்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆஷிப் சயீத் கான் கோஷா பதவியேற்றார். இந்த விழாவில் இந்திய உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் லோக்கூர் தனது மனைவி சவீதாவுடன் பங்கேற்றார்.

நீதிபதி லோக்கூரும் பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக பதவியேற்ற கோஷாவும் 2004-ம் ஆண்டு முதல் நெருங்கிய நண்பர்கள்.

லாகூர் உயர்நீதிமன்றத்தில் கோஷா நீதிபதியாக பணியாற்றியபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக லோக்கூர் பணியாற்றினார்.

பாகிஸ்தான் தலைமை நீதிபதி கோஷாவுடன் (வலது) ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர்.

இது குறித்து நீதிபதி லோக்கூர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவைப் போலவே பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திலும் கூட்டம் குறைவாக உள்ளது. பத்திரிகையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்றார்.
பாகிஸ்தான் தலைமை நீதிபதி கோஷா பற்றி குறிப்பிட்ட அவர், ‘அருமையான மனிதாபிமானி, அருமையான நீதிமான்’ என்றார்.
கடந்த 70 ஆண்டுகளில், இந்தியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் பாகிஸ்தான் தலைமை நீதிபதி பதவியேற்பில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
ஜெனரல் பர்வீஸ் முஷாரப் ஆட்சியின்போது நீதிபதி கோஷா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.