ஜோகன்னஸ்பர்க்: 19 வயதினருக்கான உலகக்கோப்பை தொடரில், ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளை வென்று முதலிடம் பிடித்தது.
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில், ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
இந்திய அணி 21 ஓவரில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை நின்றவுடன், மொத்தம் 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
இந்தியாவின் சக்சேனா அரைசதமடித்தார். இறுதியில், 23 ஓவர்களில் இந்திய அணி 115/0 என்ற நிலையில் இருந்தது.
பின்னர், 23 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 21 ஓவர்கள் மட்டுமே ஆடிய நியூசிலாந்து அணி, 147 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஜப்பான் மற்றும் இலங்கை அணிகளை வென்ற இந்திய அணி, ஏற்கனவே காலிறுதிக்குள் நுழைந்துவிட்டது. இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் தான் இடம்பெற்றுள்ள ‘ஏ’ பிரிவிலும் முதலிடம் பெற்றது.