டெல்லி: ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக இந்திய தேர்தல் ஆணையம் நியனமம் செய்து அறிவித்து உள்ளது.
18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி முதல் நடைபெற்று முடிந்த நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட கட்ட வாக்குப்பதிவு வரும் ஜுன் 1ந்தேதி தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க நாடு முழுவதும் தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்களை அகில இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கு 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள்ளும், கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.