டில்லி
ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.16 லட்சம் கோடியை எட்டி சென்ற ஆண்டை விட 33% அதிகரித்துள்ளது.
வழக்கமாக ஜி எஸ் டி வரி வசூல் கடந்த 8 மாதமாகவே ரூ,1 லட்சம் கோடிக்கு மேல் சென்றது. ஆயினும் சென்ற மாதம் அதாவது ஜூன் மாதம் மட்டும் ரூ.92,849 கோடி மட்டுமே வசூல் ஆனது. இதற்குக் காரணம் மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகப் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலானதே ஆகும்.
இந்நிலையில் சமீபகாலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,16,303 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய ஜி எஸ் டி வரி வசூல் ரூ.22,197 கோடி, மாநில ஜி எஸ் டி வரி வசூல் ரூ.28,541 கோடி ஆகும். ஒருங்கிணைந்த ஜி எஸ் டி ரூ.57,864 கோடி வசூல் ஆகி உள்ளன. இதில் ரூ.815 கோடி இறக்குமதி வரி ஆகும்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் ரூ.87,422 கோடி ஜி எஸ் டி வரி வசூல் ஆனது. இந்த ஆண்டு இது 33% அதிகரித்துள்ளது. இதைப் போல் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி வருவாயும் சென்ற ஆண்டு 32% ஆக இருந்தது தற்போது 4% உயர்ந்து 36% ஆகி உள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.