மாதிரி புகைப்படம்

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒரு கணவனும் மனைவியும் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே பெயர் சூட்டியுள்ளது.

அவ்வப்போது விநோதமான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கணவன் மனைவிக்குள் ஏற்படும் வித்தியாசமான சண்டை சச்சரவுகள் மற்றும் கால்நடைகள் தொடர்பான வழக்குகள் அதிக கவனம் ஈர்க்கும். கேரள உயர்நீதிமன்றம் அவ்வகையில் ஒரு வித்தியாசமான வழக்கை சந்தித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் அண்மையில் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்வதால் இவர்கள் இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் உள்ளது,

குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. தந்தை தரப்பில், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரே இருக்க வேண்டும் என்று வாதிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் தங்களின் வாதத்தில் விடாப்பிடியாக இருந்தனர்.

தம்பதியர்களின் வாதங்களை பொறுமையாக கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஒரு முடிவுக்கு வந்தார். இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், இதில் பாதி அதில் பாதி என பிரித்து குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று தானே பெயர் சூட்டினார்.  நீதிபதி, தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக கூறி உள்ளார்.

அத்துடன் இந்தக் குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். புதுமையான இந்த தீர்ப்புக்காக நீதிபதியை மக்கள் பாராட்டி உள்ளனர்.