பெட்ரூமில் இருந்தபடி வாதம்.. வழக்கறிஞருக்கு ‘குட்டு’’ வைத்த நீதிபதி..
கொரோனா காரணமாக இப்போது வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுகின்றன.
வீட்டிலோ அல்லது தங்கள் அலுவலகத்தில் இருந்தோ ஆஜராகும் வழக்கறிஞர்கள் ’’உடை’’ கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில்லை எனப் புகார்கள் உண்டு.
கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியுடன் வீடியோ மூலம் உரையாடிய வழக்கறிஞர், பனியன் அணிந்து இருந்ததால் விமர்சனத்துக்கு ஆளானார்.
இந்த நிலையில் அரியானா மாநிலம் ரேவரியில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கைப் பீகார் மாநிலம் ஜெகனாபாத்துக்கு மாற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ரவீந்திரபட் வழக்கை விசாரித்தார். அப்போது வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாதாடிய வழக்கறிஞர், டி-ஷர்ட் அணிந்து படுக்கையில் இருந்தபடி வாதங்களை எடுத்து வைத்துள்ளார்.
கோபம் அடைந்த நீதிபதி, ‘’ விசாரணையின் போது குறைந்த பட்ச ஒழுங்கு முறைகளைக் கூட கடைப் பிடிக்கக்கூடாதா?’ என அந்த வழக்கறிஞரைக் கண்டித்துள்ளார்.
பதற்றம் அடைந்த அந்த வழக்கறிஞர், தான் செய்த தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்க, அதனை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார்.
-பா.பாரதி