டெல்லி: டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவன செய்தியாளர்கள், எழுத்தாளர் வீடுகளில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில், தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த ரெய்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக நியூஸ்கிளிக் உள்பட சில நிறுவனங்கள் மீது மத்தியஅரசு குற்றம் சாட்டி வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மீது வழக்குப் பதிவு செய்து அதன் நிதி குறித்து விசாரணை நடத்தியது.
அதுபோல கடந்த 2021ம் ஆண்டில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்திற்கு எதிராக எதிராக வழக்குப் பதிவு செய்தது. அதில் செய்தி போர்டல் மற்றும் அதன் நிதி ஆதாரங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் செய்தது. அதேபோல் வரி ஏய்ப்பு வழக்கில் 2021ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகளால் ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் நியூஸ் கிளிக் நிறுவனத்தை சேர்ந்தவர்களை கைது செய்ய தடை விதித்திருந்தது. மேலும் இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், நியூயார்க் டைம்ஸ் விசாரணையில், சீன அரசுக்கு ஆதரவு பிரச்சாரத்தை செய்யும் விதமாக நியூஸ் கிளிக் செயல்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க மில்லியனர் நெவில் ராய் சிங்கத் என்பவர் பணம் கொடுத்ததன் பேரில் நியூஸ் க்ளிக் சீன ஆதரவு பிரச்சாரத்தை செய்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, நியூஸ் போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட சில சொத்துக்களையும்முடக்கியது. இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் இன்று (அக்.3) அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சக பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வாரண்ட் ஏதும் காட்டப்படாமலேயேகூட சோதனைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் அபிஷர் சர்மா தனது எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் , “என் வீட்டில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தினர். எனது செல்போன், லேப்டாப்பை எடுத்துச் சென்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நியூஸ்கிளிக் இணையத்தில் விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நெறியாளர் பாஷா சிங் என்ற பத்திரிகையாளர், “என் செல்போனில் இருந்து இதுதான் கடைசி ட்வீட். டெல்லி போலீஸார் எனது போனை கைப்பற்றினர்” என்று பதிவிட்டிருந்தார்.
டெல்லி-என்சிஆர் பகுதியில் சுமார் இருபது இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் சில ஊடகவியலாளர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சோதனைகள் குறித்து பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. “Newsclick உடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட பல சோதனைகள் குறித்து Press Club Of India ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. வளர்ச்சிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம், மேலும் விரிவான அறிக்கையை வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் நியூஸ்கிளிக் இணையதளத்துக்கு சீன நிறுவனங்கள் நிதியுதவி அளிப்பதாக செய்தி வெளியானது. இதை மத்திய அமைச்சர்கள் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “நியூஸ்கிளிக் செய்தி நிறுவத்துக்கு நெவைல் ராய் சிங்கம் என்பவர் நிதியுதவி செய்கிறார். இவருக்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நேரடித் தொடர்பு உண்டு. மேலும் இவருக்கு சீன ஊடக நிறுவனமான மக்கு குரூப்புடனும் தொடர்பு உள்ளது” என்றார்.அதேபோல் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், “நியூஸ்கிளிக் இணையம் பரப்பும் பொய்கள், வெறுப்பு ஆகியனவை ராகுல்காந்தியின் போலி பிரச்சாரங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று ரெய்டு நடைபெற்று வருகிறது,.