ஒடிசா சட்டப்பேரவைக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று சட்டமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால், குழப்பமான சூழல் நிலவியது.

இதுதொடர்பாக மொபைல் போன்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதையடுத்து செய்தியாளர் மாடத்திற்கு செல்லும் செய்தியாளர்களிடம் இருந்த மொபைல் போன்களை பாதுகாப்பு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இன்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொபைல் போன்கள் நிகழ்நேர செய்திக்கு அவசியம் என்று வாதிட்ட செய்தியாளர்கள், “இந்தத் தடை ஜனநாயகத்தின் ஒரு தூணாக உள்ள பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது.

மொபைல் போன் இல்லாமல் எங்கள் பணியை மேற்கொள்வது சாத்தியமில்லை. அரசாங்கம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து பத்திரிகையாளர் கேலரிக்குள் மொபைல் போன் பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.